கலெக்டரிடம் மீனவர் சங்கம் புகார் முல்லைபெரியாற்றில் தண்ணீர் திருட்டு ஒரே நாளில் 67 மோட்டார்கள் பறிமுதல்

உத்தமபாளையம், பிப்.13: கம்பம் பள்ளத்தாக்கில் அனுமதி இல்லாமல் மோட்டார் போட்டு திருட்டுதனமாக தண்ணீர் திருடிய 67 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 2ம் போகம் நெல்சாகுபடி உத்தமபாளையம், சின்னமனூர், ராமசாமிநாயக்கன்பட்டி, அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 14ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல்விவசாயம் செய்யப்படுகிறது. எதிர்பார்த்தபடி 2ம் போகத்திற்கு தேவையான வடகிழக்கு பருவமழை பெய்யாத நிலையில் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. நேற்றைய காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது. மாவட்டத்தின் குடிநீர் தேவை போக வைகை அணைக்கும் மற்றும் இரண்டாம்போக விவசாயத்திற்காகவும் அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடிதண்ணீர் திறக்கப்படுகிறது.கம்பம் பள்ளத்தாக்கில் இன்னும் கூடலூர் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு அடுத்தமாதம் மார்ச் 20 வரை தண்ணீர் தேவைப்படுகிறது. இதுபோக மழை பெய்யாவிட்டால் கோடைகாலமாக கருதப்படும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் குடிநீர்க்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் விவசாயத்திற்காகவும், குடிநீர்க்காகவும் ஆற்றில்திறக்கப்படும் தண்ணீரை ஒருசில தண்ணீர் வியாபாரிகள் அனுமதியின்றி மின் மோட்டார் மூலம் திருட்டுதனமாக நெடுஞ்சாலை மற்றும் கண்மாய் ஓரங்களில் குழாய்அமைத்து தண்ணீர் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.இதனை தடுத்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்யதேனி கலெக்டரிடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தமபாளையம் சப்கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சப்கலெக்டர் வைத்திநாதன், தலைமையில் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தமபாளையம் தொடங்கி அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். இதில் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக போடப்பட்ட 67 மின் மோட்டாரை பறிமுதல் செய்து குழாய் இணைப்புகளை துண்டித்தனர்.இந்த நடவடிக்கை இன்றும் (13ந் தேதி) தொடர்ந்து நடக்க உள்ளது. மின்மோட்டார் பறிமுதல் நடவடிக்கையில் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் கதிரேஷ்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: