தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கண்காட்சி

தூத்துக்குடி,பிப்.13: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த வரும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.ராமேஸ்வரம் முதல் குமரி வரையில் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மன்னார் வளைகுடாவில் 4 ஆயிரத்து 200க்கும் அதிகமான கடல்சார் உயிரினங்கள் உள்ளன. இங்கு அரிவகை கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமை, திமிங்கலம் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் அரியவகையாக கருதி பாதுகாக்கப்படுகின்றன. இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி தூத்துக்குடி மண்டல மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்ப அறக்கட்டளை வனஉயிரின காப்பாளர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் திருமால், ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமை, கடல் அட்டை, பவளப்பாறைகள், வண்ணவண்ண மீன்கள், விசித்திர விலங்குகள், சிப்பிகள், கடல்பாசி வகைகள், சங்குகள், பதப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர். கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.

Related Stories: