ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு

நாகர்கோவில், பிப்.13 :

ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்க தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு இறப்பது தொடர்கதையாகி விட்டது. மேலும் 2018ம் ஆண்டு மட்டும் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதிக அளவில் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரினால் நிர்வாகம் தவறான தகவல்களை தந்துள்ளது.   தற்ேபாது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் பலியாகியுள்ளார். இந்த மரணம் மருத்துவர்களின் அலட்சியப்போக்கை காட்டுகிறது. மேலும் அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்த நடக்கின்ற திட்டமிட்ட செயல்பாடுகளோ என்ற சந்தேகமும் உள்ளது.கடந்த 2018ல் டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. ஆனால் கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் சோதனை நடத்தவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மரணங்கள் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: