கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை மார்ச் 1க்கு தள்ளிவைப்பு

நாகர்கோவில், பிப்.13: கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  குமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 19ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் கன்னியாகுமரி அருகே நடைபெற்று வருகிறது. அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரி மைதானத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. 1.5 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பந்தல் மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் பிரதமர் வருவதால் சாலைகள் சீரமைப்பு பணியும் வேகமாக நடந்து வருகிறது. பலத்த பாதுகாப்புடன் இரவு பகலாக இந்த பணி நடந்து வருகிறது.  தமிழகத்தில் மதுரையில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது தஞ்சை, நெல்லை போன்ற இடங்களில் பல்நோக்கு மருத்துவ மனையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து திருப்பூருக்கு பிப்ரவரி 10ம் தேதி வருகை தந்து திட்டங்களை தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் ₹40 ஆயிரம் கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து உள்ளது என்றும், இந்த திட்டங்களை திறந்து வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் பேசுகிறார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அத்துடன் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலம், நான்குவழி சாலையில் நரிக்குளம் பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் குமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 19ம் தேதி வருகை தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வருகை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய விழா அரசு விழாவாகவும் நடைபெற இருப்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 1 வரை தேர்தல் தேதி அறிவிப்பு இல்லை

பிரதமர் மோடி கலந்துகொள்கின்ற கடைசி நிகழ்ச்சியாக மார்ச் 1ம் தேதி நடைபெறுகின்ற அரசு நிகழ்ச்சி நடைபெறும் என்று பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே தமிழகத்திற்கு வேறு புதிய திட்டங்களையும் அன்று அவர் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிக்கை வெளியாகும் என்று கூறப்பட்டு வருகின்ற நிலையில் மார்ச் 1ம் தேதி அரசு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அன்று வரையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

Related Stories: