மாவட்டம் சமூகவிரோத செயலுக்கு போலீசார் துணைபோவதாக கலெக்டர் அலுவலகத்தில் கோஷமிட்ட வக்கீல் கைது

மதுரை, பிப். 12: சமூக விரோத செயலுக்கு போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் துணைபோவதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோஷமிட்ட வக்கீலை கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்தவர் சாமி (33). இவர் மதுரை அண்ணாநகரில் தங்கி, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கறிஞர் சீருடை அணிந்து மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.இவர், ‘வண்டியூர் சுடுகாட்டில் சூதாட்ட கிளப் வைத்துள்ளனர். சமூகவிரோத செயலில் ஈடுபடும் அதை அகற்ற கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை தட்டி கேட்டதால், என்னை கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதம் ரூ.30 ஆயிரமும், மாவட்ட நிர்வாகம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு சூதாட்ட கும்பலுக்கு உடந்தையாக உள்ளனர்’ என அதிக சத்தத்தோடு கோஷங்கள் எழுப்பியவாறு, மக்கள் குறைதீர் முகாம் நடக்கும் அரங்கை நோக்கி வேகமாக வந்தார்.உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து, அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவர் ஏற்கனவே கடந்த ஜன.30ம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றம், கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடிவந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: