நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிப்பதாக புகார் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்

மதுரை, ஜன. 10: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கட்டாயக் கமிஷன் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் பெரியாறு, வைகை அணை தண்ணீர் மூலம் இந்தாண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளனர். தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்த நெல்லை அரசு நிர்ணய விலைக்கு வாங்குவதற்காக, மதுரை மாவட்டம் முழுவதும் அரசு சார்பில் 80 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விவசாயிகளிடம் நெல் வாங்குவதில் பெரும் மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் நடராஜனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:மேலூர் தாலுகா கீழையூர், வெள்ளலூர், உறங்கான்பட்டி, மற்றும் உசிலம்பட்டி தாலுகா உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அனுமதித்துள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்கின்றனர். இவர்களிடம் அதிகாரிகள் கட்டாய கமிஷன் வசூலிக்கின்றனர். 40 கிலோ நெல் மூட்டைக்கு ரூ.50 வீதம் பிடித்தம் செய்து கொண்டு, பாக்கி தொகையை கொடுக்கின்றனர்.

இந்த தொகை நெல்கொள்முதல் அமைக்க அனுமதி வழங்கிய, அதிகாரிகளுக்கு சதவீத அடிப்படையில் பங்கு பிரித்து கொடுப்பதாக கூறப்படுகிறது. அந்த அலுவலக செக்யூரிட்டிக்கும், பங்கு கொடுக்கப்படுவதாக அறிகிறோம். நெல்கொள்முதல் நிலையங்களில் விசாரித்தால் ரூ.15 ஆயிரம் வரை அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுப்பதாக கூறுகிறார்கள்.மேலும், கொள்முதல் நிலையங்களில், முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரிகள் நெல் கொண்டு சென்றால், சுத்தம் செய்யாமல் வாங்கிக் கொண்டு உடனடி பண பட்டுவாடா நடக்கிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதிலும், பண பட்டுவாடா செய்வதிலும் இழுத்தடிக்கின்றனர். இதனால், வியாபாரிகளிடம் நெல்லை விற்று விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுகிறது. எனவே, கலெக்டர் தலையிட்டு, நெல்கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும். விசாரணை கமிஷன் மூலம் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: