8 ஆண்டாக அடிப்படை வசதியில்லை ‘சாக்கடையும், குப்பையும் பிரதான பிரச்னை’

பேரையூர், டிச. 6: பேரையூர அருகே, தும்மநாயக்கன்பட்டி அசேபா காலனியில் போதிய அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். சாக்கடையும், குப்பையும் பிரதான பிரச்னை என்கின்றனர். பேரையூர் அருகே, தும்மநாயக்கன்பட்டியில் அசேபா காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதியின்றி, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தெருக்களில் வாறுகால் வசதியின்றி சிமெண்ட் சாலையை உடைத்து, கழிவுநீரை கடத்துகின்றனர். தெருக்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும், கிராமத்தில் சேகரமாகும் மொத்த குப்பையையும் அசேபா காலனியில் கொட்டுவதாக கூறுகின்றனர். குப்பையை தீ வைப்பதால், குடியிருப்புவாசிகளுக்கு சுவாசக் கோளாறு உருவாகும் அபாயம் உள்ளது. காலனியில் நல்ல குடிநீர் வசதியில்லை.

இங்குள்ள மேல்நிலைத்தொட்டி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் உப்பாக உள்ளது. இதுவும் 5 நாட்களுக்கு ஒருமுறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. அசேபா காலனிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அப்துல்காதர் கூறுகையில், ‘தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. குப்பைகளை எரிப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற கிளர்க்குக்கு வாட்ஸ் ஆப்பில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

ராமர் கூறுகையில்,  ‘தெருக்களில் வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமானுல்லா கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கு முன் காலனி உருவானது. கடந்த 8 ஆண்டுகளாக அடிப்படை வசதியில்லை. சாக்கடை, குப்பையும் அகற்றினாலே சுகாதாரமாக வாழ்வோம்.சுபைதாபானு கூறுகையில், ‘காலனியில் வெளியேறும் மொத்த கழிவுநீரும், விளையாட்டு மைதானத்தில் தேங்குகிறது. இங்கு முட்புதர்கள் வளர்ந்துள்ளன. ரேணுகா கூறுகையில், ‘வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்குகிறது. ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துவேட்டையம்மாள் கூறுகையில், ‘முதியோர்கள் தெருக்களில் நடமாட முடியவில்லை. கழிவுநீரை பள்ளங்களில் விழுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. குப்பை புகையால் மூச்சு விட முடியவில்லை. காலனிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தருவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: