ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்றத் தடை

மதுரை, நவ. 14: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய ஒருங்கிணைந்த வியாபாரிகள் நலச் சங்க தலைவர் ராஜாராம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் 444 கடைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இங்கு கடை வைத்துள்ளோம். 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் இதைச் சார்ந்தே உள்ளது. கடைக்களுக்கான வாடகையை மாநகராட்சிக்கு முறையாக செலுத்தி வருகிறோம். எங்களில் பலர் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்கின்றனர்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை தேர்வாகியுள்ளது. நகரின் 15 பகுதிகள் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தை நவீனமாக மாற்றுவதற்காக ஏற்கனவே உள்ள கடைகளை இடிக்க உள்ளனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எங்களின் வாழ்வாதாரத்தை காக்க மாற்று இடம் வழங்குவது குறித்து எதுவும் கூறவில்லை. எனவே, எங்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அதுவரையில் யாரும் எங்களது கடைகளை அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது என தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.பவானிசுப்பராயன், கடைகளை அகற்ற இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை நவ.27க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: