திட்டுவிளை கூட்டுறவு வங்கியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பூதப்பாண்டி, நவ.14: பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் திட்டுவிளை, பூதப்பாண்டி, மணத்திட்டை, நன்றிக்குழி, துவரன்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் வேளாண்மை தொடர்பான சிறு கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பூதப்பாண்டியில் இருந்து 10 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வந்தனர். அவர்கள் கூட்டுறவு வங்கியில் தங்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என கூறி அதிகாரிகளை அணுகினர். ஆனால், தலைவரை வீட்டில் ெசன்று சந்தித்து கையெழுத்து பெற்று வர வேண்டும். அப்போதுதான் புதிய உறுப்பினர்களாக சேர்க்க முடியும் என கூட்டுறவு வங்கி செயலாளர் கூறியுள்ளார். இதற்கு அங்கு வந்திருந்த ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் செயலாளரோ, தலைவரின் கையொப்பம் இல்லாமல் புதிய உறுப்பினரை சேர்க்கக்கூடாது என இயக்குநர் குழு தன்னிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏமாற்றமடைந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டுறவு வங்கி அலுவலக படிக்கட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கூறுகையில், பூதப்பாண்டியை சேர்ந்த பலரும் இந்த வங்கியில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் எங்களை மட்டும் ஏன் உறுப்பினர்களாக சேர்க்க தயங்குகின்றனர். நாங்கள் ஏன் தலைவரின் வீட்டுக்கு செல்ல ேவண்டும். அலுவல் தொடர்பான விஷயங்களை தலைவர் வங்கிக்கு வந்து கவனிக்க வேண்டும். அவர் இங்கு வந்து கையெழுத்து போட்டு எங்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். அதுதான் சரியான வழிமுறை என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள் போராட்டம் குறித்து செயலாளர் தலைவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வங்கிக்கு வந்த தலைவர், விண்ணப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளும் படி செயலாளரிடம் தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது மட்டும் போதாது, உறுப்பினர்களாக தங்களை சேர்க்கவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

Related Stories: