கொச்சுவேளியில் இருந்து பயணிகள் ரயிலாக வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் கிடைக்குமா? சென்னை செல்லும் பயணிகளுக்கு சிக்கல்

நாகர்கோவில், நவ.14:  கொச்சுவேளியில் இருந்து பயணிகள் ரயிலாக வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் இனி, நாகர்கோவில், நெல்லையில் இருந்து முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க இடம் கிடைக்காது என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். சென்னை எழும்பூர்  - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,  பகல் வேளையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இந்த ரயிலை, நாளை (15ம்தேதி) முதல் நாகர்கோவில் - கொச்சுவேளி இடையே பயணிகள் ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளனர். காலையில் இங்கிருந்து புறப்படும் ரயில், மாலையில் கொச்சுவேளியில் இருந்து  நாகர்கோவில் வந்து, பின்னர் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரசாக புறப்படும். தென் மாவட்ட பயணிகள் அதிகம் பேர் சென்னை செல்ல பயன்படுத்தும் முக்கிய அதிவிரைவு ரயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் - கன்னியாகுமரி (திருவனந்தபுரம் வழி) இடையே இயக்கப்படும் ரயிலை  கொண்டு தான், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பல மணி நேரம் இந்த ரயில் தாமதம் ஆனது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் தனி ரயிலாக, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ரயிலை பகல் வேளையில் பயணிகள் ரயிலாக மாற்றி நாகர்கோவில் - கொச்சுவேளி இடையே இயக்கப்படுவதால், இந்த ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரசாக சென்னை புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்படும் என பயணிகள் கூறி உள்ளனர். எனவே இந்த ரயிலை பயணிகள் ரயிலாக இயக்கும் திட்டத்ைத கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் சங்க  தலைவர் ராம் கூறுகையில், திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, நாமக்கல், பழனி, மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, நாளை (15ம் தேதி) முதல் நாகர்கோவிலில் இருந்து இதே மார்க்கத்தில் இயக்குகிறார்கள். இந்த மார்க்கம் வழியாக மதுரை சென்றால் 10 மணி நேரம் வரை ஆகும். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக மதுரை வரை இயக்குவதால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எந்த பலனும் இல்லை. சுத்தப்படுத்துவதற்காக அமிர்தா எக்ஸ்பிரசை இங்கு கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே அனந்தபுரி எக்ஸ்பிரசை கொல்லம் வரை நீட்டித்துள்ளதால், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், நெல்ைல, மதுரை வழியாக சென்னை செல்பவர்களுக்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் கிடைப்பதில்லை.

இதையடுத்து தான் தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளி பயணிகள் ரயிலாக இயக்கி, திருவனந்தபுரத்தில் உள்ள பயணிகளுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொச்சுவேளியில் இருந்து நாகர்கோவில் வரும் இந்த ரயில், பின்னர் கன்னியாகுமரி செல்லும் போது காலி பெட்டிகளாக தான் செல்ல வேண்டும். அவ்வாறு தான் செல்வோம் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.  ஆனால் அதை செயல்படுத்த மாட்டார்கள். நிச்சயம் திருவனந்தபுரத்தில் இருந்தே பயணிகள் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி அமர்ந்து விடுவார்கள். எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் குமரி, நெல்லை மாவட்ட பயணிகளுக்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் கிடைக்காது. கழிவறை அருகே அமர்ந்து தான் பயணிக்க வேண்டும். எனவே இந்த திட்டத்தை கைவிட கோரி டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளோம். இதில் தீர்வு ஏற்படா விட்டால் பயணிகள் சங்கத்தின் சார்பிலும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories: