வேலப்பர் கோயிலில் முருகனை தரிசிக்க பணம் இருக்கும் பக்தர்கள் உள்ளே மனம் இருக்கும் பக்தர்கள் வெளியே

ஆண்டிபட்டி, நவ.8:வேலப்பர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் கோயிலில் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பிரசாதங்கள் வழங்குவதாக, மனமுள்ள பக்தர்கள் (வெளியில் நிற்கும்) மிகுந்த வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டிக்கு தெற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில்

மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. நேற்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் அபிஷேகத்திற்காகவும், சாமியை காண நுழைவு கட்டணம் பெற்றுக்கொண்டு உள்ளே செல்கின்றனர். ஆனால் சாமி இருக்கும் கருவறையில் நிர்ணயிக்கப்பட்ட பூசாரிகளை விட (பளியர்)  6க்கும் மேற்பட்ட  பூசாரிகள் உள்ளேயே நிற்கின்றனர். ஏற்கனவே கருவறைக்கு முன்புள்ள அறை சிறிதாக உள்ள நிலையில், பூசாரிகளின் எண்ணிக்கை பக்தர்கள் விட அதிகமாக இருப்பதால் பக்தர்கள் உள்ளே சென்றும் சாமியை பார்க்க முடியவில்லை என்றும், பணம் கொடுப்பவர்களை மட்டுமே உள்ளே அழைத்து மாலை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்குவதாகவும், இலவச தரிசனத்திற்காக வெளியில் நிற்கும் பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பக்தர்  கண்ணன் கூறுகையில்,

மன நிம்மதிக்காக முருகனை தரிசிக்க நுழைவு சீட்டு கொடுத்து உள்ளே சென்றால், பூசாரிகளின் கூட்டம் தான் அதிகமாக உள்ளது. இதனால் முருகனை பார்க்க இயலவில்லை. மேலும் கோயிலில் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அறவே இல்லை என்றார்.

பக்தர்  ஜெனார்த்தனன் தெரிவிக்கையில்,

அமாவாசைக்காக முருகனை பார்க்க வந்தேன். ஆனால் இலவச தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்கள் பக்கம் பூசாரிகள் வருவதே இல்லை. நுழைவு சீட்டு கொடுத்து உள்ளே செல்பவர்களை மட்டுமே உபசரிக்கின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து விபூதியை வாங்க வேண்டியுள்ளது.

பக்தர்  சிங்கராஜ்  கூறும்போது,

முருகனை காண நுழைவு சீட்டுக்கு காசு, அர்ச்சனைக்கும் காசு,  முருகன் கழுத்திலிருந்து பக்தர்களுக்கு வழங்கும் மாலைக்கு ரூ.20லிருந்து வசதிக்கு தகுந்தார் போல் காசு. பூசாரிகள் பணத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்தர்  ராமகிருஷ்ணன் கூறியதாவது,

இந்து சமய அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள வேலப்பர் கோயில் தனது புனிதத்தை இழந்து வருகிறது. மேலும் பளியர் இனத்து பூசாரிகள் முன்பு போல இல்லாமல் பணத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.

தொடர்ந்து பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து படிக்கட்டுகளில் பக்தர்களிடம் வசூல் செய்யவும் கற்று கொடுக்கின்றனர். எனவே இந்து சமய அறநிலையத் துறையினர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: