நகராட்சி அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி திட்டமிடல் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவாரூர், அக்.11:  திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி திட்டமிடல் பணிக்காக சிறப்பு கிராம சபை கூட்டங்கள் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை அனைத்து  ஊராட்சிகளிலும் நடைபெறும் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டுக்கான  கிராம ஊராட்சி திட்டமிடல் பணிக்காக இன்று (11ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை 430 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அரசு துறையின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள், நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் 2019-20ம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து  விவாதிக்கப்படவுள்ளது.

இத்திட்ட அறிக்கையில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் திருத்தம் செய்து மீள இரண்டாவதாக நடைபெறும் இறுதி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்போடு ஒப்புதல் அளிக்க பார்வைக்கு  வைக்கப்படும்.  மேலும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் எடுத்துக்கொள்ளப்படும். எனவே இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பொது மக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: