தொடர் மழையால் பெரும்பள்ளம் அணை நிரம்புகிறது

சத்தியமங்கலம்,அக்.5: நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சத்தியமங்கலத்தை அடுத்த பெரும்பள்ளம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து கடம்பூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் வாய்க்கால் வழியாக பவானி ஆற்றில்  கலந்ததால் விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் இருந்தது. இந்த மழைநீரை தேக்க கடம்பூர் மலை அடிவாரத்தில் உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் கடந்த 1992ம்ஆண்டு ரு.6.35 கோடி செலவில் பெரும்பள்ளம் அணை கட்டப்பட்டது.  இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 31 அடி. இந்த அணையினால் கெம்பநாயக்கன்பாளையம், தாசரிபாளையம், கொண்டப்பநாயக்கன்பாளையம், செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 1030 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெற்றன. மேலும் அணையை சுற்றியுள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. பெரும்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான கடம்பூர் மலைப்பகுதியில் மழை பெய்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்யும் மழை நீர் மட்டுமே பெரும்பள்ளம் அணைக்கு வந்து சேருகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு சரிவு பகுதியில் பெய்யும் மழைநீர் பாலாறு வழியாக மேட்டூர் அணைக்கு சென்று சேருகிறது.

 இதனால்  பெரும்பள்ளம் அணை பெருமழை பெய்யும் காலங்களில் மட்டுமே நிரம்புகிறது. இந்நிலையில், கடந்த சிலநாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த ஆண்டு பெரும்பள்ளம் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: