நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற கோரி மக்கள் சாலை மறியல், லாரி சிறைபிடிப்பு

மன்னார்குடி, செப்.18: மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கை அகற்ற கோரி பொது மக்கள் குப்பை லாரியை சிறைபிடித்து நகராட்சி அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மன்னார்குடி 32 வது வார்டு  டெப்போ ரோடு பகுதியில் நகராட்சிக்கு  சொந்தமான குப்பை கிடங்கு 20 ஏக்கர்  பரப்பளவில் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு மன்னார்குடி நகரம் முழுதும் இருந்து தினந்தோறும் சேரக் கூடிய சுமார் 3 டன்  குப்பைகள் சேமிக்கப்படும். இக்கிடங்கை சுற்றி சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். குப்பைகள் குவிந்து கிடப்பதால் எந்நேரமும் துர்நாற்றம் வீசும். அடிக்கடி தீப்பிடித்து எரியும்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக  குப்பைக்கிடங்கின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட  தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து  குப்பைக்கிடங்கை அகற்ற கோரி கடந்த  8ம்தேதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 3 நாட்களுக்குள் தீ முழு மையாக அணைக்கப்படும்  என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கை விட்டனர்.ஆனால் குப்பை கிடங்கில் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை வழக்கம் போல் கிடங்கிற்கு குப்பை கொட்ட வந்த நகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த எஸ்ஐ  சண்முக சுந்தரி, எஸ்எஸ்ஐ செல்வம் தலைமையிலான போலீசார், நகராட்சி அலுவலர்கள் ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து அங்கிருந்து பெண்களும் ஆண்களும் திமுக முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், அமமுக அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வழக்கறிஞர் அமிர்தராஜா, இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கலைச்செல்வன்,   திமுக நிர்வாகிகள் ஆனந்ந், வஉசி பேரவை நிர்வாகி ராஜா ஆகியோர் தலைமையில்   ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன்படி அதிகமான எண்ணிக்கையில்   தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து 3 நாட்களுக்குள் முழுமையாக தீயை அணைப்பதாகவும், குப்பை கிடங்கு அகற்றுவது குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பதாகவும் உறுதியளித்ததன் பேரில் மக்கள்  போராட்டத்தை  கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

Related Stories: