பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் தான் காரணம் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், செப்.18 : காங்கிரஸ் அரசு செய்த தந்திரங்கள், தவறுகள் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.  பிரதமர் மோடி நேற்று தனது 68வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் விழாவையொட்டி, குமரி மாவட்ட பா.ஜ. சார்பில் நாகராஜாகோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க நிலக்கரி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். நிலக்கரியை பொறுத்தவரை முறையாக கணக்கீடு செய்து, இருப்பு எவ்வளவு உள்ளது. இந்த இருப்பு எத்தனை நாளைக்கு பயன்படும் என்பதை முறையாக கணக்கீடு செய்து, அதற்கேற்ப கேட்டு பெற வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை விட்டுவிட்டு கடைசி நேரத்தில் நிலக்கரி பற்றாக்குறை என்று கூறுவது நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது. நிலக்கரி விவகாரத்தில் முடிந்தளவு மத்திய அரசு எந்த ரீதியில் தமிழகத்துக்கு உதவ முடியுமோ, அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த பா.ஜ. அரசு தவறி விட்டது என கூறியுள்ளார். உண்மையிலேயே காங்கிரஸ் அரசு செய்த தந்திரங்கள் மற்றும் தவறுகள் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். அவர்கள் வைத்து சென்ற  பொருளாதார சுமையை பாஜ அரசு மெல்ல, மெல்ல குறைத்திருக்கிறது. நாடு வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார சுமை குறைந்திருக்கிறது என்பது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. ஜி.எஸ்.டி.க்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் அனைத்து மாநில அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்த குழு தான் முடிவு எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யினால் பெரும் பாதிப்பு உள்ளது என்று கூறுபவர்கள் இப்போது திடீரென பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர கூறுவது ஏன்?. முன்னுக்கு பின் முரணான கருத்துகளை பலர் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு முறையாக வரி செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது.

புழல் சிறையில் தவறு ஏதும் நடக்கவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுவது வருத்தத்தை அளிக்கிறது. சிறைகள் நட்சத்திர ஓட்டல் அந்தஸ்துக்கு மாறினால், கொலைகளும், குற்றங்களும் அதிகரிக்கும். ஒரு சிறையில் கைதிக்கு வழங்கப்பட வேண்டிய சாதாரண உடையை கூட வழங்க முடியாத நிலை உள்ளதா? நானும் சிறையில் இருந்திருக்கிறேன். ஏ கிளாஸ் எப்படி இருக்கும் என்பது எனக்கும் தெரியும். எனவே இந்த விஷயத்தை மூடி மறைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜ முழு அளவில் தயாராக இருக்கிறது. தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்போம். நாடாளுமன்றத்துடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், துணை தலைவர் முத்துராமன், நகர தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் தேவ், மீனாதேவ், ராஜன் உள்ளிட்ேடார் உடன் இருந்தனர். முன்னதாக மோடி பிறந்தநாள் விழாவையொட்டி வடசேரியில் சிறப்பு மருத்துவ முகாமை பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Related Stories: