திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே பிரபல ரவுடிகளின் தாய்மாமன் ஓடஓட வெட்டி கொலை: 6 பேர் கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா மருத்துவமனை அருகே பிரபல மாட்டங்குப்பம் ரவுடிகளின் தாய்மாமன் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜா (49), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இதுதவிர வீட்டின் அருகே கடந்த 4 மாதங்களாக டிபன் கடை நடத்தி வந்தார். டிபன் கடையை அவரது மனைவி பார்த்து வருகிறார்.

திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான வினோத் மற்றும் பாலாஜி ஆகியோரின் தாய்மாமன் ஆவார். ராஜா மீது மெரினா, ஜாம் பஜார் காவல் நிலையங்களில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேநேரம், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜி சிறைக்கு சென்றால் ராஜாதான் ஜாமீனில் இருவரையும் எடுப்பது வழக்கம். இதனால் எதிர்தரப்பு ரவுடிகளுக்கும் ஆட்டோ டிரைவர் ராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், புதிதாக தொடங்கப்பட்ட டிபன் கடை  நடத்துவதில் அதே பகுதியை சேர்ந்த சிலருடன், ராஜாவுக்கு முன் பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.50 மணி அளவில் திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே உள்ள பாரதி சாலையில் ராஜா நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜாவை கத்தி மற்றும் அரிவாளால் சுற்றி வளைத்து வெட்டினர். ராஜாவும் ரவுடி என்பதால் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த டிபன் கடை நடத்தி வந்த ராஜாவின் மனைவி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கணவனை மீட்டு ஆட்டோ மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் கொலை குறித்து ராஜாவின் மனைவி அளித்த புகாரின்படி ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் கல்யாண குமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: