தனியார் நகைக்கடன் வங்கியில் கொள்ளை அடிக்க ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன்: போலீசில் முக்கிய குற்றவாளி முருகன் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: தனியார் நகைக்கடன் வங்கியில் கொள்ளை அடிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காக, ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன் என கைதான முக்கிய குற்றவாளி முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் பெட் பேங்க்கில், கடந்த 13ம் தேதி வங்கிக்கு, முன்னாள் மேலாளர் முருகன், தனது கூட்டாளிகளான 8 பேருடன் சென்றார். பின்னர், அங்கிருந்த  வங்கி மேலாளர் சுரேஷ் (38), பெண் காசாளர் விஜயலட்சுமி (36) மற்றும் காவலாளி சரவணன் ஆகியோரை ஒரு அறையில் அடைத்தனர். பின்னர், அங்கிருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர்  ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன்  தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன், தனிப்படை போலீசார், சந்தோஷ், பாலாஜி மற்றும் செந்தில் ஆகிய 3 பேரை  சென்னையில் கைது செய்து, அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்கம், 2 கார், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்போது அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான முருகன் நேற்று முன்தினம் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு,  திருமங்கலம் காவல்நிலையத்துக்கு சரணடைய வந்தார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து,  ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.

போலீசாரிடம் முருகன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘அரும்பாக்கம் வங்கியில் சுமார் இரண்டு வருடமாக பணிபுரிந்தேன். வங்கியில் எந்த இடத்தில் நகைகள் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். எனவே, வங்கியில் உள்ள நகைகளை கொள்ளையடிப்பதற்கு ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 தடவை பார்த்தேன். அதன்படி, பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்ற ஆசையில் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு கடந்த ஒரு மாதமாக கூட்டாளிகள் 8 பேருடன் ரகசிய  திட்டம் போட்டு வந்தேன். கொள்ளை அடிப்பதற்காக பைக், கார்கள் தேவைப்பட்டதால், நண்பர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் கொள்ளையடிக்க பைக், கார்கள் கொடுத்து உதவினர். அரும்பாக்கத்தில் உள்ள பேங்க் தவிர மற்ற வங்கிகளிலும் இதுபோல் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினேன்’’ என முருகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விழுப்புரம் மாவட்டம், கல்யாணம்முண்டி கிராமத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி இளையராஜா என்பவரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரை தனிப்படையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

* 32 கிலோ தங்கமும் பறிமுதல்

நகை கடன் வங்கி கொள்ளை கும்பல் தலைவன் முருகனின் இன்னொரு கூட்டாளியான சூர்யா நேற்று முன்தினம் நள்ளிரவு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைய வந்தார். போலீசார் அவரையும் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 14 கிலோ தங்கத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கொள்ளை போன 32 தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படையினர் கோவையில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

* அடையாற்றில் சிசிடிவி பதிவு

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த முருகன் உள்ளிட்ட கூட்டாளிகள் தப்பிச் செல்லும்போது, வங்கியில் இருந்த சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக, சிசிடிவி பதிவு காட்சி பெட்டிகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அவற்றை போரூர் அருகே அடையாறு ஆற்றில் வீசி விட்டு சென்றதாக போலீசில் தெரிவித்துள்ளனர்.

* ஸ்டைலாக வந்து சரணடைந்த முருகன்

அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருமங்கலம் காவல்நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு வாலிபர், தலைமுடியை ஸ்டைலாக வெட்டியபடி வந்து நின்றார். அவரை பார்த்ததும் அங்கிருந்த போலீசார், ‘‘யாரப்பா நீ, எதற்காக இங்கு வந்துள்ளாய்?’’ என்று கேட்டபோது, அந்த நபர் கூலாக, ‘‘நான்தான் அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த முருகன்’’  என்று கூறி உள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

* தங்க நகைகளை உருக்கி கொடுத்த கோவை வியாபாரி

சென்னை தனியார் வங்கியில் நடந்த நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சூர்யா, கோவை பெரிய கடை வீதியை சேர்ந்த நகை வியாபாரி ஸ்ரீவத்சவாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, உடனடியாக சென்னைக்கு வரவழைத்துள்ளார். சென்னையில் ஒரு லாட்ஜில் தங்கி, தங்க நகைகளை உருக்கி கட்டியாக மாற்றி கொடுத்துள்ளார். சுமார் 3 மணி நேரம் நகைகளை அவர் உருக்கி தங்க கட்டியாக மாற்றியதாக தெரிகிறது. அதற்கு பிறகு ஸ்ரீவத்சவா கோவை வந்து விட்டார். இந்த தகவல் அறிந்த சென்னை தனிப்படை போலீசார் கோவை வந்தனர். கோவையில் பதுங்கியிருந்த ஸ்ரீவத்சவாவை பிடித்து சென்னை அழைத்து சென்றனர். அங்கே அவரிடம் விசாரணை நடக்கிறது.

Related Stories: