ஜம்மு-காஷ்மீரில் சிபிஐ நடத்திய சோதனையில் அதிர்ச்சி; 2.78 லட்சம் துப்பாக்கி உரிமம் சட்டவிரோதமாக வழங்கி மோசடி: வீரர்களின் பெயரில் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்தது அம்பலம்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட கலெக்டர்கள் மூலம் 2.78 லட்சம் துப்பாக்கி உரிமம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் துப்பாக்கி உரிம மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கி உரிமம் வழங்கலில் மோசடி  நடந்தது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி உரிம மோசடி தொடர்பாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதில், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான ஷாஹித் இக்பால் சவுத்ரி மற்றும் நீரஜ் குமார் ஆகியோரின் வீடுகளும் அடங்கும். இக்பால் சவுத்ரி தற்போது பழங்குடியினர் விவகாரங்களுக்கான செயலாளராக உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றிய சில கலெக்டர்கள், ஆயுதம் சப்ளை செய்வோரிடம் இணக்கமாக செயல்பட்டு, சட்டவிரோதமாக துப்பாக்கி உரிமங்களை வழங்கி உள்ளனர். கடந்த 2012-16ம் ஆண்டுக்கு இடையில் கிட்டத்தட்ட 2.78 லட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி உரிமங்கள் மாவட்ட கலெக்டர்களால் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் பெயரில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இதுதொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, இந்தியாவின் மிகப்பெரிய துப்பாக்கி உரிம மோசடி என்று கருதப்படுகிறது. முதன்முதலாக கடந்த 2017ம் ஆண்டு  துப்பாக்கி உரிமம் வழங்கல் மோசடி ராஜஸ்தானில் தீவிரவாத தடுப்புப் படையால் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் தீவிரவாதிகளுக்கு, போலி ஆவணங்களின் அடிப்படையில் ராணுவ வீரர்களின் பெயரில் 3,000க்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் அப்போதைய மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சிக்கு பின்னர், 2018ல் ஆளுநர் ஆட்சி அமல்படுத்திய பின்னர்,  துப்பாக்கி உரிமம் வழங்கல் மோசடி விவகாரத்தை விசாரிக்க அப்போதைய ஆளுநர் என்.என்.வோஹ்ரா சிபிஐக்கு பரிந்துரைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், குப்வாராவின் மாவட்ட கலெக்டர் பதவியில் இருந்த குமார் ராஜீவ் ரஞ்சன், இத்ரத் ரபிகி ஆகியோர் ஆயிரக்கணக்கான உரிமங்களை வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளான இவர்களை கடந்த மார்ச் மாதம் சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 - 16ம் ஆண்டுக்கு இடையில் ஜம்மு - காஷ்மீரில் 4.49 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரியாசி, கதுவா மற்றும் உதம்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் 56,000 (12.4%) உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே, 2012 - 16ம் ஆண்டில் 1,720 உரிமங்கள் வழங்கப்பட்டன.

இவற்றில் எத்தனை உரிமங்கள் மோசடியாக வழங்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் ஜம்மு - காஷ்மீரில் நடந்த ஆயுத உரிமை மோசடி விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: