மாநிலம் முழுவதும் 2020-21ம் நிதி ஆண்டில் 500 கோடியில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட முடிவு: தமிழக அரசு உத்தரவு

வேலூர்: மாநிலம் முழுவதும் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2020-21 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட 500 கோடியை அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதுதவிர பழங்குடியின மக்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 90 ஆயிரம் வீதம் மொத்தம் 80 கோடியை ஒதுக்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் கடந்த 2011-12ம் ஆண்டு செயல்முறைக்கு வந்தது. கிராமப்புற ஏழை மக்களின் வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இத்திட்டத்தின் கீழ் 2011-12ம் ஆண்டு தொடங்கி கடந்த 2015-16ம் ஆண்டு வரை 5,940 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு ஆண்டுக்கு 20 ஆயிரம் வீடுகள் வீதம் 2016-17ம் ஆண்டு தொடங்கி 2018-19ம் ஆண்டு வரை மொத்தம் 60 ஆயிரம் வீடுகள் 1,260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து 2019-20ம் ஆண்டில் 420 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து 2020-21ம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு 8 ஆயிரத்து 803 பசுமை வீடுகள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் பசுமை வீடுகள் 500 கோடி மதிப்பீட்டில் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு பசுமை வீட்டுக்கு சூரியசக்தி மின்வசதியை ஏற்படுத்த 30 ஆயிரம் உட்பட 300 சதுரஅடி கொண்ட வீட்டுக்கு 2.10 லட்சம் ஒதுக்கி வழங்கப்படுகிறது.

அதேநேரத்தில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு கூடுதலாக தலா ஒரு வீட்டுக்கு 90,000 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடு கட்டும் தொகை ₹3 லட்சமாகும். அதன்படி, பழங்குடியின மக்களுக்கு மொத்தமாக ₹80 கோடி கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், ஊரகப்பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை அதிகரிக்க செய்யவும் 20 ஆயிரம் பசுமை வீடுகளிலும் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக இடவசதியை பொறுத்து ஒவ்வொரு பயனாளிக்கும் 3 முதல் 5 பழ மரக்கன்றுகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துடன் இணைந்து வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: