சுவாச மண்டலத்தை மட்டுமல்ல...மூளையையும் பாதிக்குதாம் கொரோனா வைரஸ்... உஷாரு: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி: சுவாச மண்டலத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது மூளையையும் பாதிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு, தொண்டை தொற்று, சளி, காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி, சுவையை உணர முடியாதது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து வந்தன. இந்த அறிகுறி பட்டியலில் அடுத்ததாக மூளை பாதிப்பும் இணைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை கிளப்பி உள்ளது.

சமீபத்தில், கொரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பலருக்கு மூளையில் வீக்கம், மயக்கம், வலிப்பு போன்ற பல பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக இந்தியாவின் முன்ணனி மருத்துவமனைகளில் பணியாற்றும் நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பலருக்கு நரம்பியல் பிரச்னைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போர்டிஸ் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பிரவீண் குப்தா கூறுகையில், ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன் 28 வயதுடைய வாலிபர் மயக்க நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு வலிப்புக்கான மருந்து கொடுக்கப்பட்டது. அவருக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமலுக்கான அறிகுறி இல்லை. ஆனால், பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை அவரது குடும்பத்தினர் நம்பவில்லை.

இதன்பிறகு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு சென்று அவர் குணமடைந்தார். இவரைப் போன்று சிகிச்சை பெற்றவர்களில் பலருக்கு நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் இருந்தது’’ என்கிறார்.  டாக்டர் முகர்ஜி கூறுகையில், ‘‘கொரோனா பாதித்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு நரம்பியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டாலும், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளை அவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார். எய்ம்ஸ் நரம்பியல் வல்லுநர் காமேஷ்வர் பிரசாத் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் மூளையை பலவழிகளில் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நுரையீரலை பாதித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, உடலில் ஆக்சிஜனின் அளவை குறைத்து மயக்க நிலையை உருவாக்கும். இந்த காலக்கட்டத்தில் பலர் இறக்க நேரிடும். மேலும், நாக்கில் சுவை மற்றும் ருசி ஆகியவற்றை இல்லாமல் ஆக்கும். மேலும், கொரோனா வைரஸ் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகமுள்ளது. குறிப்பாக சிகிச்சைக்கு பிறகும், மூளை பாதிக்கும் நிலையே உள்ளது. எனவே, கொரோனா பாதிப்புக்கு தீவிர சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம். இதோடு பலருக்கு நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை இருப்பது தெரியவந்துள்ளது. மூளையில் வீக்கம் ஏற்பட்டு, ரத்தத்தை உறைய வைத்து பக்கவாதத்தை ஏற்படுத்தவும் கூடும். இதையெல்லாம் அறிந்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: