பிரதமர் மோடி அறிவுறுத்தல் கொரோனா பரவலை தடுக்க முக்கியத்துவம் தர வேண்டும்

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.கொரோனா பாதிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பொதுஇடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த என்.சி.ஆர் பகுதியிலும் தொற்று நோயை கட்டுப்படுத்த மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் எந்த ஒப்பீட்டிற்கும் இடமில்லை. நோய் தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு எண்ணிக்கை 8.2 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல், 519 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 22,123 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 15 ஆயிரத்து 385 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 62.78 ஆகும்.

* மொத்த பாதிப்பு 7 லட்சத்திலிருந்து நான்கே நாளில் 8 லட்சத்தை தொட்டிருக்கிறது.

* 1 லட்சத்தை எட்ட 110 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 53 நாட்களில் 8 லட்சம் தாண்டி உள்ளது.

* 100ல் இருந்து 1 லட்சம் எண்ணிக்கையை தொட 64 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 15 நாளில் 2 லட்சத்தையும் (ஜூன் 3), அடுத்த 10 நாளில் 3 லட்சத்தையும் அடுத்த 8 நாளில் 4 லட்சத்தையும் (ஜூன் 21), அடுத்த 6 நாளில் 5 லட்சத்தையும், அடுத்த 10 நாளில் 7 லட்சத்தையும் தொட்டுள்ளது.

Related Stories: