கேரள தங்கம் கடத்தலில் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு: தமிழகத்தை சேர்ந்தவர்களும் சிக்குகிறார்கள்: விசாரணையை தீவிரப்படுத்துகிறது என்ஐஏ

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தலில் தமிழக ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என என்ஐஏ கருதுவதால் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. திருவனந்தபுரத்தில்  ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில்  முக்கிய நபரான சொப்னா சுரேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று சிக்கினார். இந்நிலையில் கொச்சி கஸ்டம்ஸ் தலைமையிடத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள சரித்குமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சரித்குமார் மற்றும் தேடப்பட்டுவரும் சந்தீப் நாயரின் மனைவிகளிடம் சுங்க இலாகாவினர் நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தல் விவகாரத்தில் தீவிரவாதிகளின் பங்கு  நிரூபணம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

தங்கம் கடத்தும் முக்கிய  நபர்களின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில  ஆண்டுகளாகவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது.  இவற்றில் பெரும்பாலான தங்கம் தமிழ்நாட்டில் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் செய்யப்பட்டுவரும் கும்பல்களின்  கைகளுக்கு சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான்  தலைநகர் காபூல் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து, இந்தியா உட்பட சில  நாடுகளில் இருந்து ஆன்-லைன் மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இங்கிருந்துதான் தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை  சேர்ந்தவர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  ஐஎஸ் இயக்கம் செயல்பட  பெருமளவு பணம் தேவைப்படுவதால், அந்தந்த பகுதிகளில் உள்ள வாய்ப்புகளை  பயன்படுத்தி பணத்தை திரட்ட வேண்டும் என ஐஎஸ் இயக்கம் முக்கிய  நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளது. இதன்படி கேரளாவில் தங்கம் கடத்தலுக்கு  அதிக வாய்ப்பு இருப்பதால் அதன் மூலம் பணத்தை திரட்ட தீர்மானித்துள்ளனர். இதன்படிதான்  கடந்த சில ஆண்டுகளாக துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து  கேரளாவுக்கு பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவை பின்னர்  சென்னைக்கும் கடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஐஎஸ் இயக்கத்துடன்  தொடர்புடைய காஜா பக்ருதீன் என்ற முக்கிய தீவிரவாதி தலைமையில் தமிழ்நாட்டை  சேர்ந்த 7 பேர் ரகசியமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களையும்  என்ஐஏ தேடி வருகிறது. கேரளாவில் சமீபகாலமாக கடத்தப்பட்ட தங்கம் இவர்களது  கைகளுக்கு சென்றிருக்கலாம் என என்ஐஏ கருதுகிறது.

ஐஏஎஸ் அதிகாரிக்கும் தொடர்பு?

திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சொப்னா ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.  சுங்க இலாகாவினர் நேற்று முன்தினம் இந்த குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். குடியிருப்பு காவலாளியிடமும் விசாரணை நடத்தினர். அதே அடுக்குமாடி குடியிருப்பில் சொப்னாவுடன் தொடர்புடையதாக கருதப்படும் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிசவங்கருக்கும் பிளாட் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தங்கம் கடத்தல் சதி திட்டத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் சுங்க இலாகாவினருக்கு எற்பட்டுள்ளது.

சிவசங்கர் பெரும்பாலும் நள்ளிரவில் தான் இந்த பிளாட்டிற்கு வருவார். அரசு காரில் தனியாக வரும் அவர் காம்பவுண்டுக்கு வெளியே தான் காரை நிறுத்துவார் என்று காவலாளி கூறியுள்ளார். நாளுக்கு நாள் சொப்னாவுடன் சிவசமங்கரின் ெநருக்கம் குறித்த தகவல்கள் வெளியாகி வருவதை ெதாடர்ந்து அவரும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார் என்று கருதப்படுகிறது.

வாலிபரை அடித்து உதைத்த சொப்னா

கடந்த டிசம்பர் 7ம் தேதி திருவனந்தபுரத்தில் சொப்னாவின் தம்பி பிரவுண் சுரேஷின் திருமணம் நடந்தது. அன்று காலை நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சொப்னாவுக்கும் மணமகளின் உறவினரான ஒரு வாலிபருக்கும் இடையே குடும்ப விஷயம் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சொப்னா அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் தனது செல்வாக்கால் வழக்குப்பதிவு செய்யாமல் சொப்னா தடுத்துள்ளார். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள் தற்போது சமூக இணையதளங்களில் பரவி வருகிறது.

Related Stories: