சென்னை: சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், கடலூரை சேர்ந்த ஆயிஷா (39) என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னை திரும்பினார். அவரது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, பெண் அதிகாரிகள் மூலம் சோதித்தனர். அப்போது, அவரது உள் ஆடைக்குள் 390 கிராம் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹14 லட்சம். அவரை கைது செய்தனர். இதேபோல் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஷேக்தாவூத் (30), சையத் அபுபக்கர் (33), சாகுல் அமீது (39) ஆகிய 3 பேர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று சென்னை திரும்பினர். இவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் எதுவும் இல்லை. பின்னர் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தபோது உள் ஆடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தனர். 3 பேரிடம் இருந்து 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹37.8 லட்சம். 3 பேரையும் கைது செய்தனர்.