திருப்பதி அருகே செம்மரம் கடத்திய 4 பேர் கைது: 21 கட்டைகள் பறிமுதல்

திருமலை: திருப்பதியில் உள்ள கல்யாணி டேம் பகுதியையொட்டி இருக்கும் சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் கடத்தல்காரர்களின் நடமாட்டத்தை இரவு நேரத்திலும் தெரிந்து கொள்ள வசதியாக பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் மூலம் போலீசார் வனப்பகுதியை கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் கடத்தல்காரர்கள் சிலர் செம்மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் முயன்ற நிலையில் அவர்கள் தங்களிடம் இருந்த செம்மரக்கட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

போலீசார் அவர்களை விரட்டிச்சென்று ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் தாலுகாவில் உள்ள வந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், கடந்த 9 நாட்களுக்கு முன்பு செம்மரம் வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு  வந்ததும், சுமார் 30 கிமீ சுற்றளவு வரை இங்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை என்பதால் வனப்பகுதியில் இருந்து வெளியேற முயன்றபோது போலீசாரிடம் பிடிபட்டதும், இவருடன் வந்த 8 பேர் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 9 செம்மரக்கட்டைகளை  பறிமுதல் செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் பாக்ராபேட்டை வனப்பகுதியில் வனச்சரகர் ரகுநாத் தலைமையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக செம்மரக்கட்டை கடத்தி வந்த விழுப்புரத்தை சேர்ந்த குழந்தை(40), செங்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜூ(19), கோவிலூரை சேர்ந்த மாணிக்கம்(48) ஆகிய  பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 12 கட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: