மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், நடவடிக்கை விவரத்தை வழங்க வேண்டும்: பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவு

புதுடெல்லி: ‘மத்திய அமைச்சர்கள் மீது வந்த ஊழல் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்’ என பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி என்பவர், பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் உரிமை மனு மூலம் சில விவரங்களை கேட்டார். அதில், ‘பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது, அதில் எவ்வளவு பணம் இந்திய குடிமக்கள் கணக்கில் செலுத்தப்பட்டது? கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மத்திய அமைச்சர்கள் மீது எத்தனை ஊழல் புகார்கள் வந்தன, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எய்ம்ஸ் அதிகாரிகள் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது உட்பட பல விவரங்களை தெரிவிக்க வேண்டும்’ என கேட்டார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், ‘கருப்பு பணம் தொடர்பாக சதுர்வேதி கேட்ட கேள்விகள் எல்லாம், தகவல் உரிமை வரம்புக்குள் வரவில்லை’ என கூறப்பட்டுள்ளது. இதனால், மத்திய தகவல் ஆணையத்தில் சதுர்வேதி புகார் தெரிவித்தார். இதையடுத்து, பிரதமர் அலுவலகத்துக்கு தலைமை தகவல் ஆணையர் ராதாகிருஷ்ண மாத்தூர் எழுதியுள்ள கடிதத்தில், ‘மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் சரியான பதில் அளிக்கவில்லை. எய்ம்ஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கை, மத்திய அமைச்சர்கள் மீது வந்த ஊழல் புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்ற விவரங்களை பிரதமர் அலுவகம் தெரிவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: