தொன்மை வரலாற்றை பறைசாற்றும் பாறை, குகை ஓவியங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

* வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

வேலூர்: தமிழகத்தின் தொன்மை வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள பாறை ஓவியங்களையும், குகை ஓவியங்களையும் பாதுகாக்க அரசும், தொல்லியல்துறையும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலானவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களாகவே உள்ளன, இருப்பினும் சில இடங்களில் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல பெரும்பாலான இடங்களில் ஓவியங்கள் ஒரே நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சில ஓவியங்களில் கோட்டோவியம் ஒரு நிறத்திலும், உடல் பகுதி வேறு நிறத்திலும் இருக்கும். தமிழக பாறை ஓவியங்களில் அதிகமாக வெள்ளை நிறமும், சிவப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொன்மை ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. வெள்ளை நிறம், சுண்ணாம்பு கல் அல்லது வெள்ளை களிமண் போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். சிவப்பு நிறம், அடர் சிவப்பு, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு போன்ற  பல்வேறு நிலைகளில் கிடைக்கின்றது. கீழ்வாலை, செத்தவரை, அழகர் கோவில், கீழவளவு போன்ற இடங்களில் ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஒரமணகுண்டா, மகாராஜாக்கடை, மல்லசந்திரம் போன்ற இடங்களில் ஓவியங்கள் வெள்ளைநிறத்தில் மட்டும் உள்ளன. கரிக்கையூர், சேலகுறை, வெள்ளரிக்கோம்பை, வேட்டைகாரன்மலை போன்ற இடங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன. உசிலம்பட்டி, பழனி போன்ற பகுதிகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாறை ஓவியங்களில் பறவைகளும், மரங்களும், இறையுருவங்களும் மிக அரிதாகவே தென்படுகின்றன. அது போல யானை வேட்டை, புலி வேட்டை, மான் வேட்டை, பன்றி வேட்டை, உடும்பு வேட்டை போன்ற காட்சிகள் எண்ணிக்கையில் பரவலாக உள்ளன. ஆனால் மாடுகளை வேட்டையாடுவது மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. மேலும், மாடுகளை அடக்குதல், ஓட்டிச் செல்லுதல், மாடுகளின் எதார்த்த வாழ்க்கை ஆகியன அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த மனிதர்களுக்கும் மாடுகளுக்குமிடையேயான உறவுகள் புதிய கற்காலம் தொட்டே சுமூகமானதாக இருந்துள்ளது என அறிய முடிகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி விஜயநகர காலம் வரை பாறைகளிலும், குகைகளிலும் ஆதிமனிதர்களால் மட்டுமே வரையப்பட்ட ஓவியங்கள், பலவர்ண கலவையாக மாறத்தொடங்கி படிப்படியாக மேம்பட்டுள்ளது. அது பாறைகள் மட்டுமின்றி, குகைகள், கோயில் வளாகங்கள் என்று வளர்ச்சியும் பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே நாகல், குடியாத்தம் சென்றாயனப்பள்ளி, சின்னபாலம்பாக்கம், கீழ்மின்னல் என ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளில் கோட்டுருவங்கள், செந்நிற ஓவியங்கள் காணப்படுகின்றன. இதனை அடுத்து சமணர்கள் வாழ்ந்த ஆர்மா மலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த திருமலை போன்ற குகைகளில் அவர்களின் வர்ண ஜாலங்களை காண முடியும். இந்திர சபை, இந்திராணி, சாளரங்கள், விலங்குகள், யானைகள் என பலவற்றை காண முடிகிறது.

சமீபத்தில் பேரணாம்பட்டு அடுத்த ஆர்மா மலையில் வேலூர் வரலாறு என்ற முகநூல் நண்பர்கள் குழு பயணித்த போது குகைக்குள் சமணர் படுக்கையொன்றை கண்டு அங்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டனர். அப்போது செந்நிறம், பச்சை, வெள்ளை என பல வர்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களை கண்டறிந்து வெளிப்படுத்தினர். அதோடு செந்நிற கோட்டுருவங்களும் அங்கு காணப்பட்டன. இதுவரை தமிழகத்தில் கண்டுபிடித்த தொன்மைகால பாறை ஓவியங்களுக்கு கால நிர்ணயம் சரியாக கணிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்கு அருகே புதிய கற்கால அல்லது பெருங்கற்கால எச்சங்களாக கற்திட்டைகள், வசிப்பிடங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களுக்கு அருகே முறையான அகழாய்வுகள் செய்யப்படவில்லை. அவ்வாறு அகழாய்வுகள் செய்தால், அதில் கிடைக்கும் பொருட்களை பாறை ஓவியங்களோடு ஒப்பாய்வு செய்து காலத்தைக் கணிக்க முடியும். அதேபோல் சமணர்கள் உட்பட ஆன்மீகவாதிகள் வாழ்ந்த குகைகளில் தீட்டப்பட்ட ஓவியங்களையும் காலநிர்ணயம் செய்து ஆவணப்படுத்த வேண்டும். இவைகள் அன்றயை மக்களின் வாழ்வியலை காட்டும் கண்ணாடிகள் என்பதை அரசு உணர வேண்டும்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சமீபகாலம் வரை கணியம்பாடி அடுத்த பாலாத்துவண்ணான் மலையில் அமைந்த ஆதிமனிதர்களின் கோட்டுருவங்களும், பாறை ஓவியங்களும், ரத்தினகிரி கீழ்மின்னலில் காணப்பட்ட பாறை  ஓவியங்களும் குவாரிகளால் காணாமல் போயின. இதுபோன்ற ஒரு அவலம் வாலாஜா அடுத்த அனந்தலை மலைக்குன்றில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவுடையார்மேல் அமர்ந்த நந்தியின் மீது லிங்கம் கொண்ட குகைக்கோயிலில் உள்ள ஓவியங்களுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் தப்பி பிழைத்துள்ள பாறை, குகை ஓவியங்களையும், வரலாற்று எச்சங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: