வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் கோலாகலம்

திருச்சி; பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14ம் தேதி நடந்தது. இந்த நிலையில் இன்று (24ம் தேதி) காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடந்தது. முன்னதாக பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் பல்வேறு வேதங்கள் சொல்லியவாறு நம்மாழ்வாரை துளசி இலைகளால் அர்ச்சகர்கள் மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியவாறு நம்மாழ்வார் மீது போடப்பட்டிருந்த துளசியை அகற்றினர். இதைதொடர்ந்து நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகம், துளசி மாலை அணிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்றிரவு 8.30 மணி முதல் 9 மணி வரை மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் துவங்கும். நாளை அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது….

The post வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: