வேளாண் சட்டங்களை நீக்க மத்திய அரசு மறுப்பு: 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: வரும் 8ம் தேதி மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: விவசாயிகள் உடனான மத்திய அரசின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்தது. இரு தரப்பு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதன் பிறகு, கடந்த 30ம் தேதி நடந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டினை மட்டும் மத்திய அரசு ஏற்று கொண்டது. இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று விவசாயிகளுடனான 7ம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லி விக்யான் பவனில் நடந்தது. ஏறக்குறைய 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில்,  முதல் 2 நிமிடங்கள், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மின்திருத்த சட்டம், காற்று தர ஆணையம் மசோதா ஆகியவற்றை மட்டுமே திரும்ப பெற அரசு தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களினால் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும், அவர்கள் கூறும் கருத்துகளை சேர்த்து அதில் திருத்தம் செய்வதாக மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். ஆனால், விவசாயிகள் இதற்கு உடன்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தினர். இதனால் இறுதி தீர்வு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. அடுத்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை, அதாவது 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.’40 நாளில் 60 விவசாயிகள் மரணம்’பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை போராட்ட களத்தில்  60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி இறக்கிறார்கள். இதில், மாரடைப்பு காரணமாக இறந்தவர்கள் தான் அதிகம். அதற்கு முக்கிய காரணம் கடும் குளிர் மற்றும் கடந்த சில தினங்களாக இருக்கும் மழையாகும். இந்த விவசாயிகளின் இறப்புகள் அனைத்திற்கும் மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்’’ என்றார்.’அமைச்சர்களுடன் சாப்பிட மறுப்பு’கடந்த 30ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர். இந்நிலையில், நேற்றைய கூட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது மத்திய அமைச்சர்கள் விவசாய சங்கத் தலைவர்களை தங்களுடன் சாப்பிட வரும்படி அழைத்தனர். அப்போது, உங்கள் உணவை நீங்கள் உண்ணுங்கள்; எங்களுடையதை நாங்கள் உண்கிறோம்’’, என்று விவசாய சங்க பிரதிநிதிகள் அமைச்சர்களுடன் சாப்பிட மறுப்பு தெரிவித்தனர்….

The post வேளாண் சட்டங்களை நீக்க மத்திய அரசு மறுப்பு: 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: வரும் 8ம் தேதி மீண்டும் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: