வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது பரிதாபம் டாரஸ் லாரி மோதி மனைவி பரிதாப பலி; கணவன் கவலைக்கிடம்: லாரி டிரைவர் கைது; போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே டாரஸ் லாரி மோதியதில், மனைவி பரிதாபமாக பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார். இதில், லாரி டிரைவரை கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரும்பாக்கம் கிராமம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (35). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். தற்போது சின்னதுரை தனது குடும்பத்தாருடன் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் விநாயகபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியவாறு வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் சின்னதுரை, காமாட்சி, மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல் பகுதியில் கட்டிட வேலைக்காக பைக்கில் சென்றனர். பின்னர், மாலை வேலை முடிந்ததும் இருவரும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி பைக் மீது அசுர வேகத்தில் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, லாரி சக்கரத்தில் சிக்கிய காமாட்சி 30 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு உடல் சிதைந்து, கணவன் கண்ணெதிரே பரிதாபமாக  பலியானார். சின்னதுரை படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு, ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், சின்னதுரை சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் துரத்தி சென்று கீரப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் மடக்கிப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும், பள்ளிக்கரணை போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் நள்ளிரவு ஒரு மணி வரை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய மேலக்கோட்டையூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் (58) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.* விசாரிக்க வந்த போலீஸ் வேகத்தடையில் விழுந்து காயம்கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரிப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு போலீசார் வந்தனர். பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். அப்போது, கீரப்பாக்கம் ஊராட்சி தலைவரின் வீட்டு முன்பு இருக்கும் வேகத்தடை இருப்பது தெரியாமல் கான்ஸ்டபிள் சிவா, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஓடிவந்து அவரை மீட்டு அழைத்து சென்றனர்….

The post வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது பரிதாபம் டாரஸ் லாரி மோதி மனைவி பரிதாப பலி; கணவன் கவலைக்கிடம்: லாரி டிரைவர் கைது; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: