திருச்சி: டீசல் விலை குறைக்க கோரி வரும் 20ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர் சம்மேளம் திருச்சியில் நேற்று அறிவித்துள்ளது. திருச்சியில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் குமாரசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வரும் 20ம் தேதி காலை 6 மணி முதல் தொடர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. டீசல் விலையேற்றம், இன்சூரன்ஸ் காப்பீடு உயர்வு, வருமானவரி உத்தேச சட்டப் பிரிவு, டோல்கேட் நீக்குதல் ஆகிய காரணங்களுக்காக இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. இதற்கு மாநில லாரி உரிமையாளர் சம்மேளம் முழு ஆதரவை தெரிவிக்கிறது. பொதுமக்களுக்கான கோரிக்கையும் இதில் அடங்குகிறது.
பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். 20ம் தேதி தொடர் வேலைநிறுத்ததை ஆரம்பிக்கிறோம். 22ம் தேதி தமிழக மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்காமல் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கச்சா எண்ணெய் உலக அளவில் மிகவும் குறைந்தபோது கலால் வரியை சுமார் 9 முறை ஏற்றி மத்திய அரசு தனக்கு வருமானம் வரும்படிக்கு வழியை தேடிக்கொள்கிறது. அதனுடைய பலனை மக்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் கொடுக்கவில்லை. மற்ற மாநிலங்களை போன்று வாட் வரியை குறைக்க வேண்டும். டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். இந்த போரட்ட த்தில் தமிழகத்தில் 4.5 லட்சம் வாகனம் கலந்துகொள்கிறது. அகில இந்திய அளவில் 70 லட்சம் வாகனங்கள் கலந்து கொள்கிறது. முழுமையாக இந்த போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!