விளைச்சல் இல்லை, வரத்து குறைவால்

தஞ்சாவூர், டிச.8: தஞ்சாவூரில் அரிசி விலை உயர்ந்து கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களின் உணவு முறையில் பெரும்பாலும் அரிசி முதல் இடத்தை பிடித்துள்ளது. அரிசி பெரும்பாலும் ஆசிய நாடுகளிலேயே அதிகம் பயிரிடப்படுகின்றன. அரிசியில் பல வகைகள் உள்ளன. நம் இந்திய நாட்டில் குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் பல வகையான அரிசிக்காக நெல் பயிரிடப்படுகின்றன.

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு விதமான நிறம், ருசி, மருத்துவகுணங்கள் உள்ளது. சந்தைகளில் பெரும்பாலும் அரிசியின் ரகத்திற்கு ஏற்ப விலை நிலவரம் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போலவே அரிசி விலை நிலவரத்திலும் ஏற்றத்தாழ்வு இருக்கும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் எல்லா ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ. 6 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

இட்லி அரிசியான குண்டு அரிசி தரம் வாரியாக கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இதேபோல் மணச்சநல்லூர் அரிசி தரம் வாரியாக கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையானது. கர்நாடக பொன்னியானது தரம் வாயிலாக விலை உயர்ந்துள்ளது. அதாவது கர்நாடக பொன்னி அரிசி கிலோ ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பச்சரிசி தரம் வாரியாக கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையானது. பிரியாணி அரிசி ரூ.75க்கு விற்கப்பட்டது. ஐ.ஆர்.20 அரிசி கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது.

இதேபோல் சீரக சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, வரகுஅரிசி, சாமை அரிசி என அனைத்து ரக அரிசியும் விலை உயர்ந்துள்ளது. மாப்பிள்ளை சம்பா கிலோ ரூ.80க்கும், தூயமல்லி ரூ.80க்கும், வரகு ரூ.100க்கும், சாமை ரூ.110க்கும், தினை ரூ.110க்கும் விற்பனையானது. பாஸ்மதி அரிசி கடந்த 3 மாதங்களாகவே தரம் வாரியாக கிலோ ரூ.90 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அரிசி விலை உயர்வு குறித்து அரிசி வியாபாரிகள் கூறும்போது,
இந்த ஆண்டு போதுமான அளவு நெல் விளைச்சல் இல்லை. கர்நாடகத்திலும் போதிய விளைச்சல் இல்லாத காரணத்தினால் அரிசி வரத்து குறைவாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வரத்து இல்லை. இதனால் அரிசி விலை தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. அதாவது 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசி ரூ.150 முதல் 200 வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. கர்நாடகம், ஆந்ராவில் இருந்து அரிசி வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. குதிரைவாலி, தினை ஆகியவற்றின் விலை கடந்த மாதம் கிலோ ரூ.70 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மழை தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

The post விளைச்சல் இல்லை, வரத்து குறைவால் appeared first on Dinakaran.

Related Stories: