விளாத்திகுளம் அருகே கே.சுந்தரேஸ்வரபுரத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

விளாத்திகுளம், ஜூலை 13: விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விளாத்திகுளம் வட்டம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் 77 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 13 திருநங்கைகள் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கனிமொழி எம்பி தலைமை வகித்து பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கனிமொழி எம்பி பேசியதாவது: ‘கே. சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது வீட்டுமனைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக தனித்தனியாக வீட்டுமனை எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாள் வேலை வய்ப்பு திட்டத்தின் மூலமாக
சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வீடு வழங்கும் திட்டம், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் வசதிகளும் செய்து தரப்படும். இங்கு வீடு கட்டு குடியேறும் பொதுமக்கள் கண்டிப்பாக மரக்கன்றுகளை நட்டி வளர்க்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் இப்பகுதிகளில் கண்மாய் கரைகளில் தடுப்புச்சுவர் அமைத்தல், சிமென்ட் சாலை, குடிநீர் தொட்டிகள், கலையரங்கம், பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வரும் செப்டம்பர் மாதம் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா காலத்தில் உதவித்தொகை வழங்குதல், மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாது மக்களின் கோரிக்கைகளையும் ஏற்று விரைந்து நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் சிவசங்கர், வருவாய் கோட்டாட்சியர் ஜெயா, விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை வட்டாட்சியர்கள் பாலமுருகன், சுபா, துணை தாசில்தார் சரவணபெருமாள், பிடிஓ தங்கவேல், கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் போஸ், விளாத்திகுளம் பேரூராட்சித்தலைவர் அய்யன்ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் (மத்திய) ராமசுப்பு, (மேற்கு) அன்புராஜன் (கிழக்கு) சின்னமாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர்கள் (மத்திய) ராதாகிருஷ்ணன், (மேற்கு) மும்மூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விளாத்திகுளம் அருகே கே.சுந்தரேஸ்வரபுரத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.

Related Stories: