உலக யு-20 தடகள போட்டியில் முதல் தங்கம் வென்று ஹிமா தாஸ் சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து

டாம்பெரே: உலக யு-20 தடகள சாம்பியஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

பின்லாந்து நாட்டின் டாம்பெரே நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் நேற்று பங்கேற்ற ஹிமா தாஸ் (18 வயது), 51.46 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். தொடக்கத்தில் சற்று மெதுவாக ஓடியதால் மிகவும் பின்தங்கியிருந்த ஹிமா, பின்னர் வேகம் எடுத்து 3 வீராங்கனைகளை முந்தியதுடன் கடைசி 80 மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

இதற்கு முன்பாக சீமா பூனியா (வட்டு எறிதல், வெண்கலம்), நவ்ஜீத் கவுர் தில்லான் (வட்டு எறிதல், வெண்கலம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், தங்கம்) ஆகியோர் உலக யு-20  போட்டியில் பதக்கங்களை வென்றிருந்தாலும், ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற  முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை ஹிமாவுக்கு கிடைத்துள்ளது.ரோமானியாவின் ஆண்ட்ரியா மிக்லோஸ் (52.07 விநாடி) வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் டெய்லர் மேன்சன் (52.28 விநாடி) வெண்கலப் பதக்கமும் வென்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ், ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் தடகள பயிற்சி பெறத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நகோன் மாவட்டத்தின் திங் கிராமத்து வயல்வெளிகளில் சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்தான் இவர். ஹிமாவின் வேகத்தை பார்த்து வியந்த உள்ளூர் பயிற்சியாளர், தடகளத்தில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.

முதல் முறையாக சிவசாகரில் மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பங்கேற்றவர், மிக மலிவான ஷூக்கள் அணிந்து ஓடியபோதும் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். ஹிமாவின் திறமையை அடையாளம் கண்டுகொண்ட பிரபல பயிற்சியாளர் நிப்பான்... உடனடியாக கவுகாத்தி வந்து பயிற்சி பெறுமாறு அறிவுறுத்தியதுடன், ஹிமாவின் பெற்றோரை சந்தித்து அவர்களின் மகளுக்கு தடகளத்தில் மிகச் சிறப்பான எதிர்காலம் இருப்பதைக் கூறி சம்மதிக்க வைத்தார். அதோடு நிற்காமல் சாருசஜாய் விளையாட்டு வளாகத்துக்கு அருகிலேயே வாடகை வீடு பிடித்துக் கொடுத்ததுடன், மாநில விளையாட்டு பயிற்சி அகடமியில் சேரவும் உதவினார். முறையான பயிற்சி தொடங்கி ஒரே ஆண்டில் உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இளம் வீராங்கனை ஹிமாவுக்கு பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் வாழ்த்து தெரித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: