முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

சென்னை: இந்திய மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில், தென் ஆப்ரிக்கா 12 ரன் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. கேப்டன் லாரா வுல்வார்ட், டன்ஸிம் பிரிட்ஸ் இணைந்து தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். வுல்வார்ட் 33 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ராதா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து பிரிட்ஸ் – மரிஸன்னே காப் இணைந்து அதிரடியில் இறங்க, தென் ஆப்ரிக்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அரை சதம் விளாசிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். காப் 57 ரன் (33 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ராதா பந்துவீச்சில் சோபனாவிடம் பிடிபட்டார். குளோ டிரையன் 12 ரன்னில் வெளியேற, பிரிட்ஸ் 81 ரன் (56 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. டி கிளெர்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பூஜா, ராதா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து, 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக ஜெமிமா 53 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ஸ்மிருதி மந்தனா 46 ரன், ஹர்மன்ப்ரீத் 35 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்கா தரப்பில் அயாபங்கோ, க்ளோயீ, நடெனீ, நான்க்ளேகோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

The post முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: