இந்திய வீரர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள்: பாராட்டு விழாவில் டிராவிட் உருக்கம்

மும்பை: டி.20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெறும் டிராவிட் பேசியதாவது: நான் இந்த அன்பை இனி இழக்கப் போகிறேன். அருமையான வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுடன் பணிபுரியும் வாய்ப்பை தவற விடப் போகிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் எனக்கு கிடையாது. இந்த வீரர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள். இவர்கள் உழைத்த உழைப்பின் அளவு மிகப்பெரியது. அதை வார்த்தைகளால் அடக்க முடியாது. இந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்தது எனது பாக்கியம். ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தோல்விக்கு பின் என்னை மேலும் 6 மாத காலம் இந்திய அணியில் பயிற்சியாளராக வரும்படி ரோகித் சர்மா போன் செய்தார். என் வாழ்க்கையில் வந்த மிகப்பெரிய போன் அழைப்பு அது. இதற்காகவே நான் ரோகித் சர்மாவுக்கு பெரிய நன்றி சொல்வேன்” என்று கூறினார். விராட் கோஹ்லி பேசுகையில், பைனலில் ஒரு கட்டத்தில் வெற்றி நழுவ போகிறதோ என்று தோன்றியது.

தோற்கும் சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் எங்களை ஆட்டத்திற்கு கொண்டு வந்த பும்ராவை நான் பாராட்ட விரும்புகிறேன். கடைசி 5 ஓவர்களில் அவர் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். வாழ்நாளில் இது போன்ற ஒரு பந்துவீச்சாளர் கிடைப்பது அரிது. இவர் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் அதிர்ஷ்டம், என்றார். பும்ரா ஓய்வா? வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பேசுகையில், “எனது ஓய்வு வெகு தொலைவில் இருக்கிறது. நான் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறேன். இந்த பாராட்டு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மைதானம் என் வாழ்க்கையில் அற்புதமானது. நான் இங்கு 19 வயது சிறுவனாக வந்தேன். இதுபோன்ற எதையும் நான் இதற்கு முன்னால் பார்த்தது கிடையாது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். நாங்கள் இதற்கு முன் சேர்ந்து உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த உலகக் கோப்பை வெற்றி எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது” என்றார்.

 

The post இந்திய வீரர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள்: பாராட்டு விழாவில் டிராவிட் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: