மொழிப்போர் தியாகிகள் தினம்!: ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை..!!

சேலம்: மொழிப்போர் தியாகிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களும் மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.  அரசு சார்பிலும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். இதனிடையே, இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாளை கடைபிடிக்க அதிமுக தலைமை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஓமலூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் உருவ படத்திற்கு அக்கட்சியின் இணை செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப நம் அன்னை தமிழின் சுயமரியாதை காக்க,வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்து, தாய் தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர்  தியாகிகளுக்கு எனது  செம்மார்ந்த வீரவணக்கங்கள்’’ என தெரிவித்துள்ளார். …

The post மொழிப்போர் தியாகிகள் தினம்!: ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: