முன்மாதிரி திட்டம்

தமிழகத்தில்  அந்த காலத்தில் மஞ்சள் பைகள்தான் பிரபலம். கிராமங்களில் தொடங்கி,  நகரங்கள் வரை மஞ்சள் பைகள் இல்லாத ஊர்களே கிடையாது. நாகரீகம் வளர, வளர  மஞ்சள் பைகளை மக்கள் உதாசீனப்படுத்த ஆரம்பித்தனர். நகரங்களில் பிளாஸ்டிக்  பைகள் ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால் மஞ்சள் பைகளை மக்கள் ஒதுக்க  ஆரம்பித்து விட்டனர். ஜவுளிக்கடைகளில்தான் இந்த பைகள் மிகப்பிரபலமாக  இருந்தன. துணி வாங்கச் சென்றால் மங்களகரமான மஞ்சள் பைகளில்தான் துணிகளை  தருவார்கள். அந்த பை, பல விதங்களிலும் மக்களுக்கு உதவியாக இருந்தன.  பள்ளிக்குழந்தைகள்  இதில் புத்தகங்கள், சிலேட்டுகள், நோட்டுகளை வைத்துக்கொண்டு சென்ற காலம்  உண்டு. வீட்டில் பெரியவர்கள் ஜாதகம் உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைக்க,  மஞ்சள் பைகளைத்தான் பயன்படுத்தினர். புதுத்துணி எடுத்தாலும் அதை மஞ்சள்  பைகளில்தான் வைப்பார்கள். இப்படி அன்றாட வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக  மஞ்சள் பைகள் இருந்தன.இப்படிப்பட்ட மஞ்சள் பைகள் காலப்போக்கில்  தடம் மாறிப்போய் விட்டன. பிளாஸ்டிக் பைகளை ஜவுளிக்கடைகள் கையில் எடுத்ததால்  மக்களிடையே மஞ்சள் பை புழக்கம் குறைந்துவிட்டது. நகைக்கடை உள்ளிட்டவற்றில்  மட்டுமே மஞ்சள் பைகள் ஓரளவுக்கு புழக்கத்தில் இருந்தன. தற்போது அங்கும்கூட  பிளாஸ்டிக் பைகள் வந்துவிட்டன. பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகமாகி  விட்டதால், அதன்மூலம் எழும் சுற்றுச்சூழல் பேராபத்தையும், அவலத்தையும்,  சிரமத்தையும் மக்கள் உணரத் துவங்கிவிட்டனர். அரசும்கூட பிளாஸ்டிக்  பைகளுக்கு படிப்படியாக தடை விதித்து வந்தது. பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை  எப்படியெல்லாம் குறைக்கலாம் என பலரும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். இதன்  விளைவாக தற்போது மக்களிடையே மீண்டும் மஞ்சள் பை கலாசாரம் எட்டிப் பார்க்க  ஆரம்பித்துள்ளது. அதன் எதிரொலியாகத்தான் தமிழக அரசும் தற்போது மஞ்சப்பை  என்ற இயக்கத்தை துவக்கியுள்ளது.இது ஒரு முன்மாதிரியான திட்டம்.  சுற்றுச்சூழல் ஆபத்தில் இருந்து மக்களை காக்கும் மகத்தான திட்டம். ஜவுளிப்பொருட்களை மீண்டும் மஞ்சள் பையில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தாலே  பாதி பிரச்னை தீர்ந்துவிடும். மக்கள் முழுமையாக பிளாஸ்டிக் பைகளை கைவிட்டு,  மீண்டும் மஞ்சள் பைகளுக்கு தானாக மாறிவிடுவார்கள். திருமண விழாக்கள்,  பிறந்த நாள் விழாக்கள் உள்ளிட்ட வைபவங்களில், மீண்டும் மஞ்சள் பைகளில்  பொருட்களைத் தரும் வழக்கம் துவங்க வேண்டும்.  இது தொடர்ந்தால்,  பிளாஸ்டிக் பைகளுக்கு `குட்பை’ சொல்லிவிடலாம். சுற்றுச்சூழல் பாதிக்காத  வகையில், இளைய தலைமுறையினருக்கு, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிக்  கொடுக்கலாம். மஞ்சள் பை பயன்பாட்டை, படிப்படியாக  அனைவரும் பின்பற்றும்போது, துணிப்பை தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு  கிடைக்கும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பேராபத்து விலகும். மக்கள் வாழ்வில்  மீண்டும் ஆரோக்கியம் மலரும்….

The post முன்மாதிரி திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: