மாடி தோட்டம் அமைப்பது மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்

 

வலங்கைமான், ஜன. 14: மாடி தோட்டம் அமைப்பது மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று வலங்கைமான் பகுதி வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வீடுகளிலும் பின்புறத்தில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கும் அளவுக்கு இட வசதி தற்போது இருப்பதில்லை. மாற்றாக வீட்டு மாடியில் காலியாக உள்ள இடங்களில் பாலத்தீன் பைகள், உடைந்த குடம், மண் தொட்டி ஆகியவற்றில் காய்கறி விதைகளை விதைத்து வளர்க்கலாம்.

செடிகள் வளர்க்க தொடங்குவதற்கு முன்பு பாலித்தீன் பைகளில் செம்மண் தென்னை நார்கழிவு மண்புழு உரம் ஆகியவை அடங்கிய கலவையை நிரப்ப வேண்டும். தென்னை நார்கழிவு தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. மண்புழு உரம் செடிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இந்த கலவை அடங்கிய பாலித்தீன் பை மற்றும் மண் தொட்டிகளில் இரண்டு அல்லது மூன்று விதைகளை வளர்க்கலாம்.

மாடி தோட்டம் மூலம் வெண்டை, கத்தரி, புடலை, பாகற்காய், பீர்க்கங்காய் மற்றும் அழகு செடிகளையும் வளர்க்கலாம். மாடித்தோட்டம் அமைப்பதற்கான செலவும் மிகக்குறைவு தான். மாடி தோட்டம் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும். மீதமுள்ள காய்கறிகளை கடைகளில் விற்று பயன் பெறலாம். மாடி தோட்டம் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

The post மாடி தோட்டம் அமைப்பது மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் appeared first on Dinakaran.

Related Stories: