மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மையங்களில் ஸ்கேன் எடுக்க நோயாளிகள் அவதி: காத்திருப்பு… அலைக்கழிப்பு…

தேவாரம்: தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஸ்கேன் எடுக்க நோயாளிகளை காத்திருக்க செய்யும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், கூடலூர், கோம்பை, தேவாரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய நோயின் பாதிப்புகளை அறிந்து கொள்ளவும், முறைப்படுத்தி சிகிச்சை பெறவும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.குறிப்பாக தலை, வயிறு, கை, கால், முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஸ்கேன் எடுக்கும்போது இதன் பாதிப்புகளை உணர்ந்து உயர் சிகிச்சை அளித்திட பரிந்துரை செய்யப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, உள்நோயாளிகள் சிகிச்சைக்கான சீட்டு, டாக்டர்களின் பரிந்துரை கடிதம், என்ன வகையான பாதிப்புகளை ஸ்கேன் செய்வது உள்ளிட்ட விபரங்களை தந்தால் அதற்கு தகுந்தாற்போல தனியார் மருத்துவமனைகளில் இயங்ககூடிய ஸ்கேன் மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து இதன் ரிப்போர்ட் கிடைக்கும்.மாவட்டத்தில் தேனியில் இதற்கான தனியார் ஸ்கேன் மையங்கள் இயங்குகின்றன. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக வரக்கூடிய நோயாளிகள் கொண்டு வரக்கூடிய டாக்டர்களின் பரிந்துரை கடிதம், மற்றும் ஆதார், முதல்வர் காப்பீடுதிட்ட அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுகிறார்கள். காலை 9 மணிக்கெல்லாம் நோயாளிகள் தங்களது நோய்களுக்கு தேவைப்படக்கூடிய ஸ்கேன் எடுப்பதற்கான முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டையை ஒப்படைத்தாலும், இதன் அப்ரூவலுக்காக இரவு 8 மணிவரைகாத்திருக்கும் நிலை உள்ளது.சில நேரங்களில் மறுநாள் வந்து ஸ்கேன் செய்து கொள்ளுங்கள் என தனியார் மையங்களில் சாதாரணமாக கூறிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதேபோல் 5, 6, மணிநேரம் காத்திருந்து முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டையில் ஒப்புதல் வந்துவிட்டாலும், தனியார் ஸ்கேன் மையங்களை பொறுத்தவரை முதல்முன்னுரிமை பணம் கட்டி ஸ்கேன் பார்ப்பவர்களுக்கே வழங்கப்படுகிறது.முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் எடுப்பவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது தொடர்கதையாகி வருகிறது.நோயாளிகளின் நீண்ட நேர காத்திருப்பை முதல்வர் காப்பீட்டு திட்ட பிரிவில் வேலை பார்க்ககூடிய ஊழியர்களும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. மிகவும் வயதானவர்கள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டநேரம் உட்காரவைப்பதால் உடலில் மற்ற நோய்களின் பாதிப்பும் உண்டாகிறது. எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  குறிப்பாக தனியார் ஸ்கேன் மையங்களில் எதற்காக இப்படி அலைக்கழிப்பு நடக்கிறது. நோயாளிகளை எதற்காக 10 மணிநேரம் வரை காத்திருக்க வைக்கின்றனர் என்பதனை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆய்வு செய்யவேண்டும். முதல்வர் காப்பீட்டு திட்டம் என்பது ஏழை மக்கள் எளிதில் மிக உயர்ந்த சிகிச்சை பெறுவதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்டது, ஆனால் அந்த திட்டத்தின் கீழ் பரிசோதனைக்கு வருவோரை தனியார் ஸ்கேன் மையங்களில் இதுபோல் காத்திருக்க வைப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.உடனடி நடவடிக்ைக தேவைமுதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் ஸ்கேன் மையங்களில் நோயாளிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதும், அப்ரூவல் வரவில்லை என கூறி மறுநாள் வரவழைத்து இதேபோல் உட்காரவைப்பதும் எதற்காக நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. ஸ்கேன் மையங்களுக்கு அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தும், அவர்கள் இப்படி நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது. எனவே மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படக்கூடிய ஸ்கேன் மையங்களின் டாக்டர்களை வரவழைத்து இதற்கான விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் பெறவேண்டும். பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும், தனியார் ஸ்கேன் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது….

The post மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மையங்களில் ஸ்கேன் எடுக்க நோயாளிகள் அவதி: காத்திருப்பு… அலைக்கழிப்பு… appeared first on Dinakaran.

Related Stories: