மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழா

மன்னார்குடி, ஏப்.10: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா விடையாற்றி விழாவின் நிறைவு நாளையொட்டி கிருஷ்ண தீர்த்தத்தில் நேற்றுமுன்தினம் இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. இதில் பெருமாள் பாமா, ருக்மணி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் புகழ்பெற்ற வைணவ கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 18 நாட்கள் திருவிழா நடந்தது.

தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் 12 நாட்கள் விடையாற்றி விழாவும் நடந்தது. பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா விடையாற்றி விழாவின் நிறைவுநாளையொட்டி நேற்றுமுன்தினம் இரவு கோயில் அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடந்தது. இதையொட்டி கோயிலில் இருந்து பாமா, ருக்மணி சமேதராக புறப்பட்ட பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கிருஷ்ண தீர்த்தத்தில் கட்டப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர், வாண வேடிக்கைகள் முழங்க தெப்போற்சவம் நடைபெற்றது.

தெப்பத்தில் பாமா, ருக்மணி சமேதராக பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி குளத்தை மூன்றுமுறை வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜகோபாலசாமியை தரிசனம் செய்தனர். தெப்ப திருவிழாவை முன்னிட்டு டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: