மண்டபம் கடற்கரை பகுதியில் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை

மண்டபம், டிச. 30: ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினசரி பயன்படுத்தி வரும் மேற்கு கடற்கரைப்பகுதியில் உள்ள சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கு கடற்கரை பகுதி அமைந்துள்ளது. துறைமுகப் பகுதியிலிருந்து மேற்கு கடற்கரைப் பகுதிக்கு செல்ல மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் மண்டபம் பேரூராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் தினசரி 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் டூவீலரிலும், மீன்பிடி உபகரணங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டும்,மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல நடைபயணமாகவும் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீனவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட தொலைதூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தார்ச்சாலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் பல்லாங்குழிகள் ஏற்பட்டுள்ளது.

இதனை சீரமைப்பதற்காக கரடு முரடான கற்களை போட்டு அப்பகுதியில் மீனவர்களும், நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது சீரமைத்து வருகின்றனர். இதனால் இதில் வாகனங்கள் செல்லவும் மீனவர்கள் நடந்து செல்லவும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபம் கடற்கரை பகுதியில் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: