மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நகராட்சி, பேரூராட்சிகளில் 1,447 மனுக்கள் குவிந்தன

 

புதுக்கோட்டை, டிச.30: நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து 1,447 மனுக்கள் பெறப்பட்டன என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18.12.2023 முதல் 02.01.2024 வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் நேற்று கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 40, 41, 42 ஆகிய வார்டுகளுக்கான சிறப்பு முகாம் அசோக் நகரில் உள்ள மார்லின் மஹாலிலும், அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட 17, 23 ஆகிய வார்டுகளுக்கான சிறப்பு முகாம் அறந்தாங்கி நகராட்சி, அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், கீரனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரை உள்ள வார்டுகளுக்கான சிறப்பு முகாம் திருச்சி-புதுக்கோட்டைமெயின் ரோடு, ஒஎஸ்பி திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 769 மனுக்களும், இதர 678 மனுக்களும் என மொத்தம் 1,447 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நகராட்சி, பேரூராட்சிகளில் 1,447 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Related Stories: