மகாசக்தி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 21: ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, ஜெயங்கொண்டம் மகாசக்தி மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.ஆடிமாதம் என்றால் அம்மன் மாதம் என்பர். ஆடிமாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோயில்களில் பொதுமக்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சாகை வார்த்தல், பால்குடம் எடுத்தல், அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி வழிபடுதல் என பெண்கள், குழந்தைகள் என விழாக்கோலமாக இருக்கும். அந்த வகையில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் அமைந்துள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் ஊர்வல நிகழ்ச்சி நடந்தது.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள தில்லை காளியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வேலாயுதம் நகரில் உள்ள மகாசக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தடைந்தனர். தொடர்ந்து, மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், கொரோனா போன்ற கொடிய நோய்கள் வராமல் இருக்கவும் உலக நன்மை வேண்டி மகா சக்தி மாரியம்மனுக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம் இளநீர் தேன், தயிர், பால், எலுமிச்சை மற்றும் பழங்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post மகாசக்தி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: