ஊட்டி,டிச.31: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பலர் முதுமலை செல்லும் நிலையில் கல்லட்டி இணைப்பு சாலைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை அதிகரிப்பது அவசியம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன.இங்குள்ள செங்குத்தான மலைகளில் குறுகிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் கொண்ட சாலைகளாக உள்ளன.
இதனால், சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். குறிப்பாக,ஊட்டியில் இருந்து முதுமலை மற்றும் மைசூருக்கு கல்லட்டி,மசினகுடி மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வந்தது.குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளே விபத்தில் சிக்கி வந்தனர். அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, காவல்துறை இப்பாதையில் வெளி மாநிலம் மற்றும் வெளியூர் வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளது.
மேலும், தலைகுந்தா வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருந்த போதிலும், ஒரு சிலர் கல்லட்டி பாதையை இணைக்கும் வேறு சாலைகள் வழியாக மசினகுடி மற்றும் முதுமலை செல்ல முயற்சிக்கின்றனர்.கூகுள் மேப் மூலம் இணைப்பு சாலைகளை கண்டறிந்து இப்பாதையில் செல்ல முற்படுகின்றனர். எனவே, இச்சாலையில் விபத்துக்களை தடுக்க தலைகுந்தா தவிர கல்லட்ட மலைப்பாதையை இணைக்கும் மற்ற சாலைகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை அதிகரிப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post புத்தாண்டை முன்னிட்டு முதுமலையை முற்றுகையிடும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலை பாதையில் கண்காணிப்பு அவசியம் appeared first on Dinakaran.