பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஆவணங்களை கைப்பற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப், ஒன்றிய குழுக்களுக்கு 2 நாள் தடை

சண்டிகர்: பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பயணத்துக்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆவணங்களை, மாநில அரசிடம் இருந்து சேகரிக்கும்படி பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு பஞ்சாப் அரசும், ஒன்றிய உள்துறை அமைச்சகமும் அமைத்துள்ள குழுக்கள் விசாரணை நடத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரசாரம் செய்ய சென்ற பிரதமர் மோடி, விவசாயிகளின் போராட்டத்தால் நடுவழியில் சிக்கினார். அவருடைய வாகனம் பாலம் ஒன்றின் மீது 20 நிமிடங்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. நாடு முழுவதும் பாஜ.வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒன்றிய பாதுகாப்பு செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு பஞ்சாப்பிற்கு நேற்று நேரில் சென்றது. பிரதமர் வாகனம் நின்ற மேம்பாலத்தில் ஆய்வு நடத்தியது. பஞ்சாப் போலீஸ் தலைவராக உள்ள ஏடிஜிபி சித்தார்த் சத்தோபத்யாயா மற்றும் பிரதமர் பாதுகாப்பு பணியை கவனித்த 12 மூத்த அதிகாரிகள் அடுத்த 24 மணி நேரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் மாநில அரசின் தலைமை செயலாளர் அனிருத் திவாரி முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஒன்றிய அரசிடம் நேற்று சமர்பித்தார். அதில், பிரதமர் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்த 2 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில், இந்த பாதுகாப்பு குளறுபடி விவகாரம் தொடர்பாக ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, ‘பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற பதிவாளர் சேகரித்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவருக்கு பஞ்சாப் காவல்துறை, ஒன்றிய, மாநில விசாரணை அமைப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், இவை அனைத்தையும் மேற்பார்வை செய்வதற்காக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி மற்றும் சண்டிகர் காவல்துறையின் டிஜிபி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இந்த உத்தரவு வரும் 2 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய, பஞ்சாப் மாநில அரசுகள் அமைத்துள்ள குழுக்கள் எந்தவிதமான விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது,’ என உத்தரவிட்டு, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.காங். தலைவர்கள் ஏன் மவுனம்? லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘‘மக்கள் மிகவும் புத்திசாலிகள், பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் பிற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். இந்த மவுனம், பிரதமரின் பாதுகாப்புக் குறைபாட்டின் பின்னணியில் என்ன இருந்தது, அது ஏன் நடக்க அனுமதிக்கப்பட்டது, அதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பதைப் பற்றி நிறைய கூறுகிறது,’’ என்றார்….

The post பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஆவணங்களை கைப்பற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப், ஒன்றிய குழுக்களுக்கு 2 நாள் தடை appeared first on Dinakaran.

Related Stories: