பாலம் கட்டுமான பணிக்கு அவசர கோலத்தில் பூமி பூஜை

வேப்பனஹள்ளி ஜூலை 16: வேப்பனஹள்ளி தொகுதியில் திமுகவினர் முயற்சியால் கொண்டு வரப்பட்ட பாலம் கட்டுமான திட்டத்திற்கு, கே.பி.முனுசாமி எம்எல்ஏ அவசர கோலத்தில் பூமி பூஜை போட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சென்னசந்திரம் பஞ்சாயத்து பந்தலூர் முதல், விருப்பசந்திரம் வரை பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், ஐபிகானப்பள்ளி கிராமத்திலும் பாலம் கட்டி கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கடந்த 01.02.2021 அன்று, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில், வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் மற்றும் திமுக பிரமுகர் மோகன்ராவ் ஆகியோர் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் ஏற்கப்பட்டு நபார்டு வங்கி உதவியுடன், ஐபிகானப்பள்ளியில் பாலம் கட்ட ₹4.5 கோடியும், பந்தலூரில் பாலம் கட்ட ₹3.5 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை வெயிடப்பட்டது.

இதையடுத்து, பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியிடம் திமுகவினர் தேதி கேட்டிருந்தனர். இந்நிலையில், வேப்பனஹள்ளி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான முனுசாமி மற்றும் அதிமுகவினர் அவசரம், அவசரமாக நேற்று முன்தினம்(14ம் தேதி) பூமி பூஜை போட்டனர். இதுதொடர்பாக தகவல் இல்லாததால் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. திமுகவினரின் முயற்சியால் கொண்டு வந்த திட்டத்திற்கு உரிமை கொண்டாடி, தங்களால் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக அவசர கோலத்தில் பூமி பூஜை போட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post பாலம் கட்டுமான பணிக்கு அவசர கோலத்தில் பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: