பஸ்கள் நிறுத்துமிடத்தில் லாரிகளை நிறுத்தி போலீஸ் அபராதம் விதிப்பதால் விபத்து அபாயம்

 

ஊட்டி, பிப்.20: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் காய்கறி லாரிகள் உட்பட தனியார் வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்வதால் பயணிகளை ஏற்றி இறக்குவதில் சிரமம் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. ஊட்டி-குன்னூர் சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டி நோக்கி வர கூடிய அரசு பஸ்கள் அனைத்தும் இப்பகுதியில் பெரியார் நினைவு தூண் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக போக்குவரத்து காவலர்கள் ஊட்டி நோக்கி வர கூடிய காய்கறி ஏற்றி செல்லும் லாரிகள், சுற்றுலா பயணிகள் வர கூடிய வாடகை கார்கள், ஆம்னி பஸ்கள், ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் போன்றவற்றை பஸ்கள் நிறுத்தும் பகுதியில் நிறுத்தி சாவகாசமாக ஆவணங்களை கொண்டு வருமாறு கூறி சோதனை செய்து அபராதம் விதிக்கின்றனர்.

இந்த பகுதி மறைவான பகுதி என்பதால் மறைவாக நின்று கொண்டு திடீரென வாகனங்களை மடக்கி அபராதம் விதிக்கின்றனர். இதனால் பஸ்கள் நிறுத்த போதிய இடமின்றி பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்று சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது.

எனவே போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சேரிங்கிராஸ் பஸ் நிறுத்துமிடத்தில் நின்று காவல்துறையினர் அபாரதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். இதே பகுதியில் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்றால் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. இதேபோல் ஏடிசி பகுதியில் மாலை நேரங்களில் காவலர்கள் இல்லாததால் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்குவது அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியிலும் விபத்து ஏற்பட கூடிய சூழல் நிலவுகிறது.

The post பஸ்கள் நிறுத்துமிடத்தில் லாரிகளை நிறுத்தி போலீஸ் அபராதம் விதிப்பதால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: