பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின

விருதுநகர்/சாத்தூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை, வணிகவரி துறை, சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர், உதவி வேளாண்மை அலுவலர், வருவாய்துறை கிராம உதவியாளர், தனியார் கல்லூரி அலுவலர்கள், சாலைப்பணியாளர்கள், சுகாதார போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் உள்பட்ட 1,452 ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தால் அனைத்து அரசுத்துறை பணிகளும் பாதிப்படைந்தன. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனியாண்டி, முத்துராமலிங்கம் கூறுகையில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் இறந்த, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வணிகவரி துறை, அரசு மானியம் பெறும் தனியார் கல்லூரி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின appeared first on Dinakaran.

Related Stories: