ஈரோடு, ஏப். 14: ஈரோடு மாவட்டத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 281 வழக்குகளில் ரூ.5.19 கோடி பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே ஈரோட்டில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 180 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை மற்றும் பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை விநியோகிப்பதை தடுக்கவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படை வீதம் 24 பறக்கும்படைகளும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் ஒரு கூடுதல் பறக்கும்படை என மொத்தம் 25 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றதாக 281 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் ரூ.5 கோடியே 19 லட்சத்து 70 ஆயிரத்து 919 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் 211 வழக்குகளில் ரூ.2 கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 73 ரொக்கம் விடுவிக்கப்பட்டது. 70 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் ரூ.1 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரத்து 20 விடுவிக்கப்படாமல் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனையில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 180 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
The post பறக்கும்படை சோதனையில் 180 மூட்டை அரிசி சிக்கியது appeared first on Dinakaran.