நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் என்னென்ன விழிப்புணர்வு செய்ய வேண்டும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் நிகழ்ச்சியில் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தடைசெய்வது குறித்து அலுவலர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் மேற்கொள்ளுவதற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் சாரு பேசுகையில், நம்ம ஊரு சூப்பர்பிரச்சாரத்தில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்துவது, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், திட மற்றும் திரவகழிவு மேலாண்மைகளை குறைபப்துடன், கழிவு உருவாகும் இடத்திலேயே கழிவு மேலாண்மை செய்யும் நடைமுறைகளை மேம்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தடைசெய்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருள்களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நீர்பாதுகாப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகள் மேற்கொள்ளுதல், சுற்றுப்புறம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் பராமரிக்க பொதுமக்களின் பங்களிப்பினை ஊக்கப்படுத்துதல் போன்றவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஒ சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மகளிர் திட்ட இயக்குனர் வடிவேலு, ஆர்.டி.ஒ கீர்த்தனாமணி, மாவட்ட ஊராட்சி செயலர் சந்தானம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னியின்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலசந்திரன், லதா மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி திட்டஅலுவலர்கள், தூய்மைபாரத இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post நம்ம ஊரு சூப்பர் பிரசாரம் என்னென்ன விழிப்புணர்வு செய்ய வேண்டும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: